சாதனை !

Thread started by Russellhni on 23rd July 2016 12:37 PMசென்னையை ஒட்டிய அந்த கல்லூரியின் 50வது வருட விழா. அதையொட்டி, கல்லூரியில் படித்த, ஐந்து சிறந்த சாதனையாளருக்கு கெளரவ விருது அளிக்க ஏற்பாடு.

ஐந்து பேரில், ஒருவர் பத்ம பூஷன் டாக்டர் கந்தசாமி. இந்திய அரசின் ஒரு முக்கிய அணு சக்தி விஞ்ஞான மையத்தில் டைரக்டர். நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டாமவர், கோபாலன், ராணுவத்தில் பணி புரியும் ஒரு கர்னல். கார்கில் புகழ். நாட்டு சேவைக்காக, வீர சக்ர பதக்கம் பெற்றவர்.

மூன்றாமவர், முகம்மது ரபி , பெரிய போலீஸ் அதிகாரி. கறை படியாத சிறந்த அதிகாரி என பெயர் பெற்றவர். தீவிரவாதத்தை ஒழிக்க, ஓயாமல் உழைப்பவர். சிறந்த எழுத்தாளரும் கூட.

நான்காமவர், பத்மஸ்ரீ டாக்டர். நான்சி, நாடறிந்த புற்று நோய் சிகிச்சை நிபுணர்.

ஐந்தாவது, சிம்மன், ஒரு இளம் சினிமா நடிகர். கலைச்சேவைக்காக ! இவரும் பத்ம பூஷன் விருது பெற்றவர். இளைஞர்களின் காதல் இளவல். இளைஞிகளின் இதய துடிப்பு. இந்த பல்கலை கழகத்தில், பி.ஏ, இளங்கலை பட்டம் பெற்று, பின் நடிக்க சென்று விட்டார். காதலைக் கொட்டி நடிப்பதில் இர்வருக்கு ஈடு இணையே இல்லை. இன்றைய முன்னணி நடிகர்கள், கதா நாயகிகளிடம் என்னங்க ! என்னங்க என்று வழியும் காட்சிகளில் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் !! .

சிம்மன் சமூக சேவையில் நாட்டம் கொண்டவர். தனது ரசிகர் மன்றம் மூலமாக, ரத்த தானம், எய்ட்ஸ் தடுப்பு, உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு என பல நற்பணிகளை செய்து கொண்டிருக்கிறார் என செய்தி அடிக்கடி வரும் .

குறிப்பாக அவர் படம் வெளியாகும் போது கட்டாயம் அவர் செய்யும் தான தர்மம் பற்றி நியூஸ் வரும் . முதல் பக்கத்தில் வரும். கட்டம் போட்டு வரும். அதை யொட்டி அவர் நடித்து வெளிவரும் படத்தின் போஸ்டரும் வரும்.


****

பட்டமளிப்பு அரங்கத்தில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கூட்டம் களை கட்டியிருந்தது. கோலாகலமும் கும்மாளமும் அரங்கம் இரண்டு பட்டு கொண்டிருந்தது. மச்சி ! சிம்மன் வராராமே! மாணவ மாணவியரிடையே எதிர்பார்ப்பு.


முதல் வரிசையில், நான்கு சிறப்பு விருந்தினர்களும் அமர்ந்திருந்தனர். விழா ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து, நடிகர் சிம்மன் அரங்கத்தில் நுழைந்தார். கொஞ்சம்வாரி , கலைத்து விட்ட தலை. மூன்று நாட்கள் வளர்ந்த தாடி மீசை. தூங்காத சிவந்த கண்கள். லெவிஸ் பான்ட், கட்டம் போட்ட இறுக்கமான டீ ஷர்ட். இருட்டான அந்த அரங்கத்தில் நுழையும் போதும், கண்ணில் கருப்பு கண்ணாடி. நடிகன் எது செய்தாலும், அது ஒரு ஸ்டைல் தான் !

சிம்மன் வந்து விட்டார், சிம்மன் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என மாணவர் இடையே ஒரு கிசுகிசுப்பு. மாணவ மாணவிகளில் சிலர் எழுந்து சிம்மனை கண்களால் தேடினர். அந்த அரை வெளிச்சத்திலும், மாணவர் மத்தியில் ஒரு சலசலப்பு.

நிறைய இளம் பெண்களின் கண்கள் நடிகர் சிம்மன் பேரில். கொஞ்சம் காதலாகி கசிந்து..வாயோர வழிசல். தரை கொஞ்சம் ஈரமானது. வாசலில் நின்று விழாவிற்கு வரும் மாணவிகளை பார்த்து, வழிந்து கொண்டே இருந்து விட்டு, நேரங்கழித்து அரங்கத்திற்குள் வரும் இள வட்டங்கள் அதில் வழுக்கி விழும் அளவிற்கு !

அரங்க மேடை களை கட்டி விட்டது. கல்லூரி முதல்வர் எழுந்தார் . மைக் அருகே வந்தார் . அமைதி ! அமைதி ! சைலன்ஸ் ப்ளீஸ்! . அரங்கம் அமைதியானது. கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார். மாணவரிடையே எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

பல்கலை கழக துணை வேந்தர், மற்றும் சில தலைமை பேராசிரியர்கள் பேசிய பின், கெளரவ பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவரிடையே எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

முதலில், கந்தசாமி, பின்னர் கோபாலன், முகம்மது ரபி, டாக்டர் நான்சி என ஒருவர் பின் ஒருவராக மேடையேறி விருதை பெற்றுக் கொண்டனர். நன்றி கூறினர்.அரங்கம் அமைதியாக இருந்தது. மாணவரிடையே எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

கடைசியாக, முதல்வர், இளம் நடிகரை மேடைக்கு அழைத்தார்.

அவ்வளவுதான், மாணவர் கூட்டத்தில் ஒரு சிலிர்ப்பு. ஒரு கிளு கிளுப்பு. எங்கிருந்துதான் மாணவர் நடுவே அந்த வேகம் வந்ததோ தெரியவில்லை.

நடிகர் சிம்மன் மேடை ஏறியதும், இரண்டாவது வரிசையிலிருந்த மாணவர்கள் எழுந்து கரவொலி எழுப்பினர். நான்காம் வரிசையில் ஒரு மாணவன் சீழ்க்கை ஒலி எழுப்பினான். உடனே, எட்டாவது வரிசையில் நால்வர் சீழ்க்கை அடித்தனர். யாரோ ஒரு மாணவன், கையில் வைத்திருந்த பலூனை பின் குத்தி வெடித்து ஓசைப் படுத்தினான். பின்னாடியே இன்னொருவன், பின் இன்னொருவன். கூடவே விசில் சத்தம் அரங்கத்தை பிளந்தது.

ஒருவரை பார்த்து மற்றொருவர். காட்டுத்தீ போல, மற்ற மாணவரிடையே கரவொலி பற்றி கொண்டது. சீழ்க்கை ஒலி சீறியது. கரகோஷம் காதை பிய்த்தது., சிம்மா நாம ஒலியும் விண்ணை பிளந்தது.

சில நொடிகளில், மாணவர்கள் அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டனர், ஒரு சிலரை தவிர. கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது.

கும்பலாக இருக்கும் போது, அவர்கள் தம் சுய சிந்தனையை மீறி பறவை கூட்டங்கள் போல, மந்தைகளை போல, ஒருவரை பார்த்து ஒருவர் செயல் பட்டனர். இது ஒரு குரூப் டைனமிக்ஸ்.

முன் வரிசை நான்கு சிறப்பு விருந்தினர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நாமும் எழுந்து கொள்ள வேண்டுமா? கரவொலி எழுப்ப வேண்டுமா? அல்லது இப்படியே அமர்ந்து இருக்கலாமா?

நாமோ பெரிய படிப்பு படித்தவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள். கவுரவ விருது வாங்க வந்தவர்கள். ஒரு நடிகனுக்காக, இந்த சின்ன பையனுக்காக எழுந்து கொள்வதா?

கர்னல் கோபாலனுக்கு முகம் கறுத்து விட்டது. சிம்மனின் கட்டுப்பாடு அற்ற நடை உடை அவருக்கு ஆத்திரமூட்டியது. கொஞ்சம் கூட அவருக்கு அதில் உடன்பாடு இல்லை.

மற்ற மூவர் நிலையும் கிட்ட தட்ட அதுவே. சே! ஒரு நடிகனுக்கு கொடுக்கும் வரவேற்பும், மதிப்பும் நமக்கில்லையே! இந்த நாட்டிற்கு நாம் ஆற்றும் தொண்டு எங்கே? இந்த நடிகனின் பங்கு எங்கே? ஆற்றாமையாக இருந்தது அவர்களுக்கு. இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். தயக்கம். கை தட்டலாமா? வேண்டாமா? போயும் போயும் ஒரு கூத்தாடிக்கா? இவன் தகுதி எங்கே, நாம் எங்கே?

பார்த்துகொண்டே இருக்கையில், மேடையில் இருந்த சில மூத்த பேராசிரியர்கள் தயக்கத்துடன் எழுந்து, நடிகரை வரவேற்றனர். சிலர் அரை மனதுடன், கை தட்ட, தயங்கி தயங்கி கல்லூரி முதல்வரும், துணை வேந்தரும் கரவொலி எழுப்பினர்.

அவர்களுக்கும் தர்ம சங்கடம். முதல்வருக்கு நடிகர் சிம்மனை விருது பட்டியலில் சேர்க்கவே விருப்பமில்லை. ஆனால், மாணவ சங்க கோரிக்கைக்கு உடன் பட்டாக வேண்டிய நிலை.

வேறு வழியில்லை. வேண்டா வெறுப்பாக, முன்வரிசையில் , கவுரவ விருதுக்காக வந்திருந்த நால்வரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர். ஏதோ கடனே என்று மேம்போக்காக கை தட்டினர்.

ஆறவில்லை விஞ்ஞானி பத்ம பூஷன் கந்தசாமிக்கு. பக்கத்தில் இருந்த கர்னலிடம் முணுமுணுத்தார் நடிகனை தனியாக கூப்பிட்டு கவுரவித்திருக்கலாம். இப்போ, நமக்கு கொஞ்சம் தலை குனிவுதான்..

ஆமோதித்தார் கர்னல் கோபாலன். ஆமாம்! இந்த கால பசங்களுக்கு ஏன் தான் இந்த சினிமா மோகமோ? உருப்பட மாட்டாங்க ! இந்த கல்லூரி அழைப்பை ஏற்று ஏண்டா வந்தோமென்று இருக்கு.! கோபம் கொப்பளித்தது அவர் குரலில்.

நடிகனைப் பாருங்க. தாடியும், ஜீன்ஸ் பாண்டும். சகிக்கலை. என்ன சாதிச்சாருன்னு இவனுக்கு விருது? பக்கத்திலிருந்த ரபி ஐ.பி.எஸ்.புழுங்கினார்.

இன்றைய கவர்ச்சி இதுதான்! நம்ப சேவையை யார் மதிக்கறாங்க?இந்த நாடு உருப்படுமா?. வருந்தினார் டாக்டர் நான்சி.

நாட்டுக்கு உழைக்கும் நாம் எங்கே! நடிகர்கள் இவர்கள் எங்கே? இதை இந்த மாணவர்கள், மக்கள் எங்கே புரிஞ்சிக்கறாங்க?- கர்னல் அங்கலாய்த்தார்.

இதற்கிடையில், சிம்மன் மேடை ஏறி விருது வாங்கி கொண்டார். அத்துனை மாணவர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள். இளம் புயல் சிம்மன் வாழ்க என்று முழங்கினார்கள்.

விருது வாங்கியதும், நன்றி சொல்ல நடிகர், மைக் அருகே சென்றார். அவரைப் பின் தொடர்ந்த மாணவர் கரகோஷமும் சீழ்க்கை ஒலியும் காதை செவிடாக்கியது.

சிம்மன் பேசத்தொடங்கினார். உடனே, அரங்கமே அமைதியானது.

மதிப்புக்குரிய துணை வேந்தர் அவர்களே!, முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய பேராசிரிய பெருந்தகைகளே, கெளரவ விருது வாங்கும் விஞ்ஞானி கந்தசாமி ஐயா போன்ற நாட்டின் சிறந்த தூண்களே! மாணவ மாணவி நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்.

உங்களது ஆர்வமும் பாராட்டுக்களும் என்னை திக்கு முக்காட வைத்தது. மிக்க நன்றி. ஆனால்.... இதற்கு நான் உரியவன் அல்ல...."

நிறுத்தினார். அரங்கமே அமைதி. ஐந்து வினாடிக்கு பிறகு தொடர்ந்தார்.

"நான் நிஜமல்ல. நிழல்.. என்ன சொல்ல வருகிறார் இவர்? அரங்கத்தில் தும்மல் போட்டாலும் கேட்கும் அமைதி.

தொடர்ந்தார் சிம்மன். நான் சொல்வது நிஜம். நாட்டுக்காக தங்களை அற்பணிக்கும் விஞ்ஞானி ஐயா, கர்னல் சாப், டி.ஐ.ஜி சார், மதிப்புக்குரிய டாக்டர் நான்சி அம்மா போன்ற இவர்களே உண்மையில் நிஜம். அவர்கள் எங்கே, நான் எங்கே? இவர்கள் தொண்டுதான் தேச தொண்டு. இவர்களது பங்கு நாட்டின் அச்சாணி போல. அவர்களால், நமது கல்லூரிக்கும், பல்கலைக் கழகத்துக்கும், மாநிலத்திற்கும் , ஏன் நமது நாட்டிற்கே பெருமை.

இவர்களுடன் சேர்ந்து இந்த மேடையை பகிர்ந்து கொள்வதே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் படித்த கல்லூரியில் நான் படித்தேன் என்பதே எனக்கு கவுரவம். உங்களுடன் சேர்ந்து அவர்களை கவுரவிக்கும் இந்த விழாவில் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும் அவர்களை என் சிரம் தாழ்த்தி பணிகிறேன். அந்த திருப்தியுடன், அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

சிம்மன் பேசி முடித்தவுடன், மீண்டும்கரவொலி விண்ணை பிளந்தது. முதல்வர் முகத்தில் பெருமை. என்ன அழகாக பேசினான் சிம்மன். கல்லூரிக்கே பெருமை சேர்த்து விட்டான். எனது மாணவன். அருகில் சென்று கைகுலுக்கி விடையளித்தார்.

முழு விருப்பத்துடன். முகத்தில் மலர்ச்சியுடன். மற்றவருடன் சேர்ந்து , இப்போது கெளரவ விருது பெற்ற நால்வரும் தயங்காமல் எழுந்து கை தட்டினர்.

சிம்மன் மேடையிலிருந்து இறங்கி, நான்கு சிறப்பு விருந்தினரையும் வணங்கி கைகுலுக்கி விடை பெற்றார். விருப்பத்துடன் அவர்களும் அவனை வாழ்த்தி வழி அனுப்பினர்.

கந்தசாமி ரொம்ப அழகாக பேசினான். இல்லை? ரொம்ப பெருந்தன்மை அவனுக்கு!

டி.ஐ.ஜி நம்மை உயர்த்திவிட்டான். ஹி இஸ் கிரேட்! இந்த விருதுக்கு தகுதியானவன் தான்!

கர்னல் கோபாலன். ஆமாம். இவனைப் போய் தவறாக நினைத்து விட்டேன் . அவரது விழியோரம் பனித்திருந்தது

டாக்டர் நான்சி பிரமாதம்!. நம்ம மனத்தில் எவ்வளவு சீக்கிரம் இடம் பிடிச்சிட்டார், சிம்மன்!

****

விழா முடிந்து விடை பெறும் பொது, கர்னல் கோபாலன் கேட்டார் கந்த சாமி சார், சிம்மன் போகும்போது நம்மை பார்த்து கண் சிமிட்டினானா என்ன?

எனக்கும் அப்படித்தான் தோன்றியது! விளையாட்டு பிள்ளை! என்றார் விஞ்ஞானி கந்தசாமி.

****

சிம்மன் தனது காரில் ஏறி அமர்ந்தார். அவரது அம்மாவை கைபேசியில் அழைத்தார்.

என்ன சிம்மா! விழா முடிந்ததா? விருது கொடுத்தார்களா?

விருது வாங்கிட்டேம்மா. அம்மா! இன்னொரு விஷயம். அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன். விழாவிலே, இன்னைக்கு அப்பாவை எழுந்து நின்னு எனக்கு கைதட்டல் போட வைத்து விட்டேன். அவரை அழக்கூட வைத்து விட்டேன்..

"அப்படியா ! அப்பாவையேவா? எதற்கும் அசர மாட்டாரே அந்த மனுஷன்! பெரிய சாதனை தாண்டா இது! நீ யாரு? கர்னல் பிள்ளையா? கொக்கா? அப்பா உன்னோட பேசினாரா சிம்மா?"

"இல்லேம்மா! என்னை கண்டுக்கவே இல்லை. அவருக்கு நான் மிலிடரிலே சேரலைங்கற கோபம் இன்னும் குறையலே!."

அம்மா சிரித்தாள் பரவாயில்லே விடுடா! இனியாவது உன்னை தனது மகன் என்று சொல்லிக்கிறாரா பார்ப்போம்!. எல்லாம் காலப் போக்கிலே சரியாயிடும்! நாளைக்கே நீ அரசியல் கட்சி ஆரம்பிச்சி மந்திரியானால், கர்னல் உனக்கு சலாம் போடப் போகிறார் !"


****முற்றும்

Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)