-
சந்தோஷமே வருக வருக..
சந்தோஷமே வருக வருக ( இடரெல்லாம் போனால் சந்தோஷமாகத் தானே இருக்கும் வாழ்க்கை..எனில் இந்தப் பதிகம் படிக்கலாம்)
*
திருஞான சம்பந்தர் அருளிய
இடர் களையும் பதிகம்..
**
எளியேனின் உரை முயற்சி
*
சின்னக் கண்ணன்
**
பாசமுடன் கொஞ்சம் பணிவையும் சேர்த்துனக்கு
ஈசனே நன்மாலை இட்டிடுவேன் – நேசமிகு
பிள்ளையிடம் சொல்லியிப் பேதையை ஆட்கொண்டு..
அள்ளித் தரச்சொல் அருள்..
பிந்தினேன் உமது பாட்டின்
…பிழையிலா உரையை நெய்ய
நிந்தனை செய்தார் நண்பர்
.. நின் தழல் ஒற்றிக் கண்ணில்
வந்தனஞ் சொல்வாய் கண்ணா
…வார்த்தைகள் வந்து வீழும்
கந்தனின் தந்தை நன்றாய்க்
…காட்டுவான் வழியை என்றார்..
கடற்கரை மாலை சென்றால்
…காட்சிகள் கண்ணுள் சென்றே
திடமென இன்பஞ் செய்யும்
…தீர்க்கமாய்க் காற்றும் மோத
புடமிடும் பொன்னைப் போலே
…பொலிந்திடும் கற்ப னையில்
இடர்களை பாக்க ளுக்கு
… இங்குரை எழுத வந்தேன்..
**
(”என்னடா வந்தே பாட்டா எழுதிக்கிட்டிருக்க..”
”ஹப்பாடி..வந்துட்டயா மனசாட்சி எப்படி ஆரம்பிக்கறதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன்..”
”ஆமா..மத்தவங்களும் அப்படியே தான் இருக்காங்க!..ஆமா வந்தே என்ன எழுதப்போற.. இடர்களைப் பாக்களா..அப்படின்னா..துன்பங்கள் கொண்ட பாடல்களா.”.
:அசட்டு மன்ச்சு..சந்தி முக்கியம்..! இடர்களை பாக்கள்.. அஃதாவது இடர் களையும் பாடல்கள்.. இடர் களையும் பதிகம் என நம்ம ஞானம் எழுதியிருக்காப்பல”
”என்ன திடீர்னு மதுரைபாஷை வருது..ஞானம்னா உன்னோட காலேஜ் மேட் ஞான சுந்தரா.”.
”ச்சு..அவர் வேற..இது ஞான சம்பந்தர்.. செல்லப்பிள்ளையோன்னோ..செல்லமா சொல்லிப் பார்த்தேன்..”
”அந்த இடர்களையும் பதிகம் எந்தக் கோவிலுக்கு எழுதியிருக்கார்.”.
”அப்படிக்கேளு..மன்ச்சு.. திரு நெடுங்களம்னு ஒரு இடம்.. அதாவது சமவெளியில் அமைந்த பெரிய ஊர்னு அர்த்தம்..பிற்காலத்துல திரு நெடுங்குளமா மருவி.. திரு நெட்டாங்குளமாய் இப்போ வழங்கப் படுது..அதுவும் திருச்சில துவாக்குடிக்கு வடக்கில் செல்லவேண்டுமாக்கும்..இப்ப தான் லேடஸ்டா கும்பாபிஷேகமெல்லாம் பண்ணியிருக்காங்க.
மூலவர்:திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர்.
இறைவி:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.. ஈசன் சுயம்புலிங்கமாய் அருள் பாலிக்கிறார்..அவர் இருக்கற இடத்துலேயே மிஸஸ் ஈசனும் இருக்கறதா ஐதீகம்..தட் ஈஸ்.. இந்தத் தலத்துல தன்னோட இடப்பாகத்தை உமாக்கு ஷிவா கொடுத்துடறதால தேவி உமை அரூபமா இருக்கறதால..அந்த சந்திதிக்கு மட்டும் இரண்டு விமானங்கள் உண்டு..இதுவும் ஒரு விசேஷம் கோவில்ல..”
“குட்..சமர்த்துப் பையன் நீ..ஆமா என்னவாக்கும் ஸ்தல புராணம்..|
“வா..மன்ச்சு..எழுதிப் பார்க்கலாம்!”
**
-
ஹலோ ஹாப்பினஸ் :) சந்தோஷமே வருக வருக..
இடர் களையும் பதிகம்.. தொடர்ச்சி..
**
**
காலம் என்பது மூன்றெழுத்துத் தான்.. ஆனால் இதையே இலக்கணமாய்ப் பார்த்தால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றாய்ப் பிரிப்பர்..காலத்திற்கு நேரமென்று அர்த்தமும் உண்டு..
சில பல காலங்கள் சென்றன என்று வாக்கியம் வந்தால் சில பல வருடங்கள், யுகங்கள் எனச் சொல்லலாம்
(எல்லாம் காலம்டா..
மன்ச்சு ஷ்ஷ்)
ஆகப்பலகாலங்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரம்.. என்னாச்சுன்னாக்க…
செந்தழற் கனலா இல்லை
..செவ்வரி இதழா இல்லை
பொன்னகை ஒளியா இல்லை
…போதையின் விழியா இல்லை
வண்ணமாய் இருக்குந்தோற்றம்
..வாகுடன் மிளிர்ந்த தங்கே
திண்ணமாய் சிகப்பாய் அன்று
…சென்றனன் கதிரோன் மேலே..
யெஸ்..மெல்ல மெல்ல மாலைக் கதிரோன் பைபை சொல்லிக் கிளம்புகின்ற நேரம்..அந்தக் கானகம்..இல்லை இல்லை சோலை..சோலையா..வனமா..எனச் சொல்ல இயலாது
பூஞ்செடி பலவும் உண்டு
…புளியமும் வேம்பும் மேலும்
மாஞ்செடி வளர்ந்த தோற்றம்
..மரங்களும் அங்கே உண்டு
வாஞ்சையாய் வருடும் காற்றில்
…வளைந்திடும் நாணல் உண்டு
பூஞ்சையாய்ச் சோகம் கொண்டால்
…புத்துயிர் வருமே யன்றோ..
எப்பொழுதும் வாசமிகுபூக்கள் கொண்ட தோட்டம்..அங்கே அடர்த்தியான அரச, வேப்ப புளிய ஆல மரங்கள்.. நடு நாயகமாய் ஒரு சின்ன மண்டபம்..அங்கே கருவிழிகளின் அழகில் கண்ணிமைகள் கட்டுண்டிருக்க அந்தக் கட்டழகி எண்ணத்தில் ஒன்றே ஒன்று, தன் உணர்வினில் ஓடி உறைந்திருக்கும் அவனை மனதில் கொண்டு அவனது லிங்கத் தோற்றத்திற்கு மலர்களால் அர்ச்சித்த வண்ணம் தவமாய் இருந்தாள்..
அவள்..ஈசனின் தலைவியான உமை தான்.. பாவம் தலைவி..தலைவிக்குத் தலைவிதி வசத்தால் தலைவனைப் பிரிந்து பூலோகத்தில் வந்துவிட்டாள்..இருப்பினும் பிரிவுத்துயர் தான்..ஓ..லார்ட் ஷிவா.. உங்களைப் பிரிந்து நான் இருக்க எப்படி மனதில் நினைந்தீர்..யூஹேவ் டு கம்..வென் யூஆர் கோயிங்க் டு கம்..என்று பலப்பலவாய் காதலாகிக் கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்டிருந்த வேளையில்…
“பெண்ணே…அழகியே”
:”யாரது..என் சிவ சிந்தனைக்குளத்தில் கற்கள் எறிவது..அதுவும் என்ன குரலோ..”
உமையின் விழிமலர்கள் விரிய வியப்பும் பயமும் குடிகொள்கிறது..
வாலிபன் தான்..ஆனால் தோற்றம்..கொஞ்சம் காரிருளின் கருமை நிறம்.. கண்களில் துறுதுறுப்பு குறும்பு பின் சற்றே ஒருவித பயமுறுத்தும் தன்மை.. மின்னலின் ஒளியைத் தன்னகத்தே கொண்ட பற்கள் தான் தீர்க்கமான நாசி..இதயத்தைத்துழாவிடும் கண்கள்,கொஞ்சம் ஆற்றுப் படுகைமேடு போல கொழுக்மொழுக் கருமைக்கன்னம்…குரலில் இனிமை.ம்ஹூம் இல்லை..
”பெண்ணே நீ யார்..”
மறுபடியும் கேட்டுச் சிரிக்கிறான் அந்தக் கள்ளன்..யெஸ் அவனைப் பார்க்கக் கள்ளன் போலத் தான் இருக்கிறது…போடா போ.. எனக்குப் பயமில்லை..என் உள்ளம் கவர்ந்தகள்வன் இப்போது என்னுடனில்லை..ஆனால் என் நெஞ்சத்தினுள் இருக்கிறான்.. யாருக்கும் யாரிடமும் எனக்குப் பயமில்லை…
எனச் சொல்லிக்கொண்டாலும் கொஞ்சம் பயம் தான்.. உதறி மெல்ல பதிலிறுக்கிறாள்..
நான் யார் என்பதற்கு முன் நீ யார்..
ஹா.. பெண்ணே ..என் கேள்விக்கு எதிர்க்கேள்வியா..சரி பழைய உவமை.. பூவில் எதற்காக வண்டுகள் மொய்க்கின்றன.. புதிதாகச் சொல்வதென்றால் கடலலைகள் கரையைத்தொட்டுவிடத்தானே மீண்டும் மீண்டும் அலைகின்றன.. நான் இந்தப் பக்கம் சென்றிருந்தேன் இருமுறை.. உன்னையும் கண்டேன்.. ஏதோ தீவிரமாய் கண்ணை மூடி இந்தக் கல்லில் பூக்கள் போட்டுக்கொண்டிருந்தாய்..உன்னழகில் மயங்காமல் இருக்க முடியுமா என்ன..எனில் உன்னிடம் பேசவே வந்தேன்..”
உமை சீறுகிறாள்.. இது கல்லில்லை.. என் கணவர் ..மற்றும் இந்த உலகத்துக்கே ஈசன்.. அவர் அசைந்தால் இந்த உலகே அசையும்..அவர் கண்ணோக்கினால் எந்தத் துரும்பும் சாம்பலாகிவிடும்.. நீ உட்பட..
கோபத்திலும் உன் பேச்சு அழகாயிருக்கிறது பெண்ணே – கள்ளன் சிரித்தான்.. கள்ளமாய்ச் சிரித்தான்..உன்னைக் கரம்பிடிக்க ஆசை எனக்கு…
வானில் சூரியன் மறைந்து மதி ஏறிக் கொண்டிருந்தான்..அன்று பெளர்ணமி என்பதாலோ என்னவோ தனது நிலவினை (கிரணங்களை) அந்த்ச் சோலைக்குள் முழுக்கக் காட்டும்போதுகண்ட காட்சியில் சற்றே மனமும் பதைத்தான்..
சொன்னவண்ணம் நிற்கவில்லை கள்ளன்.. தேவியின் கரத்தைத் துணிச்சலாய்ப் பற்ற தேவி உதறினாள்.. என்ன ஆச்சு..ஈசா.. இதை நீ பார்த்துக்கொண்டு தானிருக்கிறாயா..
”கடல் அலை என்று நன்றாகத் தான் உவமை சொன்னாய்..எந்தக் கடலலையும் கரையில் குடிபுக முடியாதடா…”
”பரவாயில்லை நீ சொல்வதைச் செல்ல வார்த்தைகளாய் எடுத்துக் கொள்கிறேன்.. நாமிருவரும் இருப்பது ஏகாந்தம் தானே..என்னை டா போட்டுக் கூப்பிடலாம் நீ..”
மறுபடியும் கரம்பற்ற முயல தேவி கொஞ்சம் நடுங்கினாள்..ஏகாந்தம் வேறு தனிமை வேறடா பாவி.. தனிமையில் நானிருக்க இப்படிச் செய்வது ஈசனுக்கே அடுககாது..மனதினுள் சொல்லிக் கொண்டவள் கிடுகிடுவென ஓடிஅந்தப் பக்கமிருந்தமரத்தின் பின் ஒளிந்தாள்..
சில நிமிஷம் தான்.. வெளியில் எட்டிப் பார்க்க கள்ளன் இருந்த இடம் வெறுமை.. திரும்பினால் மறுபடி கள்ளன்..சிரிப்புக் கள்ளன்..
வேறிடத்தில் விறுவிறுக்கஓடி மறுபடி ஒளிய அங்கும் வந்தான்..பின் மீண்டும் இன்னொரு இடம்..அங்கும் அவன்..
மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க. கொஞ்சம் நின்றாள் உமை..ஈசா உனக்குக் கண்ணில்லையா என்னைக் காப்பாற்று. இதென்ன கண்ணுக்குள் ஈசன் சிரிக்கிறார்.. திறந்தால்..கள்ளன் தோற்றத்தை விடுத்து அவள் உள்ளங்கவர்ந்த மகாதேவன்…சிரித்த படி..
தேவி..
”இதுவும் திருவிளையாடலில் ஒன்று எனச் சொல்லாதீர் இறைவா…” ஓடிச் சென்று சாய்ந்து கொண்டாள் மார்பினில். “..என்ன இது.. என்னை இப்படி பூலோகத்திற்கு அனுப்பி பின் திரும்ப வந்தபிறகும் இப்படியா”..- உமைக்கு வார்த்தைகள் கொஞ்சம்முன் பின் வந்தன..” ஓ மை லார்ட் ..இனி என்னைவிட்டு எங்கும் போகக்கூடாது..சமத்தோல்லியோ..ப்ளீஸ் இந்த ஹெல்ப் இந்த பூன் எனக்குக் கொடுப்பா”\\
ஷ்யூர் தேவி.. என்றார் ஈசன்..”இது ஜஸ்ட் ஃபார் ஃபன் தேவி.. நீ என்னிடம் பயமுற்றது போல் அங்குமிங்கும் ஒளிந்துகொண்ட இச்சோலை இனி ஒளிமதிச்சோலை என்றழைக்கப்படும்..அப்புறம்..என் இடது பக்கத்திலேயே நீ ஐக்கியமாகிவிடு.. இந்த சோலைக்கருகில் சமவெளியில் – திரு நெடுங்களத்தில் நானும் நீயும் தம்பதி சமேதராக அருள் பாலிக்கலாம்” என மேலும் சொல்ல தேவியின் கண்களில் ஆனந்தம் பொங்கியது..
இது தான் திரு நெடுங்களத்தின் தலவரலாறாகச் சிறிதுகற்பனை கலந்து எழுதியது..
*
எப்படி இருக்கு மன்ச்சு..
ஒண்ணும் சொல்றதுக்கில்லை போ..ஆனா உமாதேவி தவம் செய்த இடம்னு தான் வலையில் எல்லாவிடத்திலும் போட்டிருக்கு..எதற்காக பூவுலகு வந்தாள்னுல்லாம் விளக்கமா இல்லை..அப்புறம்..
அப்புறமென்ன மன்ச்சு..ஸ்ட்ரெய்ட்டா விளக்கத்துக்குள்ற போய்டலாமா..
நேத்துக்கு ஃப்ளாட் கீழ ஒரு பொண்ணோட பேசிக்கிட்டிருந்தயே..அவங்க சொந்த ஊர் கோயம்புத்தூராக்கும்..
எப்படிக் கண்டுபிடிச்ச..சரீ..இன்னொண்ணு..அது பொண் இல்லை..மாமி..வாவா..இடர்களையும் பதிகத்தின் பாக்களைப் பார்க்கலாம்..
**
-
வா வா மகிழ்ச்சியே சுகம்தரும் சொர்க்கமே..
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
முதற்பாடல்..
****
“மன்ச்சு..ஒனக்கு ஸ்ருதி தெரியுமோ”
”:இரு வர்றேன்.. இசைன்னு எடுத்துக்கிட்டேன்னா அதுல ஏழு ஸ்வரங்கள் இருக்கு..ச ரி க ம ப த நி.. இரண்டு ஸ்வரங்களை ஒரே நேர்க்கோட்டில இணைக்கறது தான் ஸ்ருதி… கொஞ்சம் ஜாஸ்தியாய்டுச்சுன்னு வை..ஸ்ருதி சேரலைன்னு பாட்டுப் போட்டில டிஸ்க்வாலிஃபை பண்ணிடுவாங்க..என்ன முழிக்கறே.. சரி.சரி.. நீ சொன்னது கமலோட பொண்ணைத் தானே..”
‘இல்லைப்பா இல்லை.. என்னோட ரிலேட்டிவ் இப்பத் தான்காலேஜ் முடிச்சு ஒரு வேலைல ஜாய்ன்பண்ணாளே..”
”ஆமாம்..அவளுக்கு என்ன.. நன்னா லட்சணமா இருப்பா..ஒன்னோட ரிலேட்டிவா இருந்தாலும்”
‘ இதானே வேணாங்கறது.. அவ சேர்ந்து மூணு மாசமாச்சு.. ஒரு நாள் காலைல அவளோட ஜி.எம் வந்தப்ப அவ அஸ்யூஸ்வல் குட்மார்னிங்க் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாளாம்’
“என்ன”
“சார் இன்னிக்கு யூ ஆர் லுக்கிங் வெரி யங்..உங்களுக்கு இந்த டார்க் ப்ளூ ஸ்யூட் ரொம்ப சூட் ஆகுது டை ஆல்ஸோ வெரி நைஸ் – அப்படின்னு இருக்கா..”
“என்ன ஏதாவது லவ்வாம்மா.. வாஸ்ஸப்ல சொன்னாளா”
“ச் அதெல்லாம் இல்லை.. அவர் வயசானவர்ப்பா..ஆக்சுவலா மொத நாள் அவர் ஒரு இம்பார்ட்டண்ட் இமெய்ல் அனுப்பச் சொல்லியிருக்கார்..இவ மறந்துட்டா..ஸோ காலைல வந்தவுடனே இண்ட் டர் காம்ல கூப்பிட்டு இந்த மாதிரி புகழ்ந்துட்டு ஸார்..நான் இமெய்ல் அனுப்ப மறந்துட்டேன்னு சொல்லியிருக்கா..’
“அவர் இட்ஸால்ரைட்னு சொன்னாராக்கும்”
“இட்ஸால்ரைட் சொன்னதென்னவோ வாஸ்தவம்..ஆனா கூடவே ஒரு மெமோவும் மெய்ல் பண்ணிட்டார்!”
“அடப்பாவமே..சரி சரி.. நீ எதுக்குச் சொல்றேன்னு புரியுது..மறையுடையாய்க்காகத் தானே..’
“அதுக்கே தான்..வா..போய்ப் பார்க்கலாம்..”
*
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
*
“திரு நெடுங்களத்தில் உறையும் இறைவனே..
உன்னை இகவாழ்வில் பல குறைகள் கொண்டவர்கள், “ வேதங்களை உடைமையாய் க் கொண்டவனே, புலித் தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்தவனே, அழகிய நீண்ட ஜடாமுடிமேல் வளரும் இளம் பிறையை அணிந்த ஈசனே, உனது தலைக்கோலம் எவ்வளவு எழிற்கோலம் அன்றோ..” என்றெல்லாம் உன்னை வாழ்த்திப் போற்றினாலும் அவர்களீன் குறைகளை மன்னித்து அருளுவாய்..
அப்படிப் பட்ட நீ, உன்னைத்தவிர வேறு தெய்வமில்லை.. உனது பாதமே சரண் என்று இருக்கும் அடியவர்களின் துன்பங்களைத் துடைத்து அருள்புரிவாயாக..”
*
-
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
இரண்டாம் பாடல்..
****
இரண்டாம் பாடல்..
தேவர் எல்லாம் திரள்திர ளாக
ஆவல் கொண்டே பிரம்மனை அணுகி
அபயம் அபயம் அசுரர் எம்மை
சுபமாய் முடிக்க கருத்துக் கொண்டார்
ஆதலின் பிரம்ம சொல்வீர் சேதி
பாதக அசுரரை வெல்வது எப்படி
சாதக மாகவே சிரித்த பிரம்மனும்
நாதன் விஷ்ணுவின் பாற்கடல் கடைந்தே
ஆங்குள அமுதை அமரரும் உண்டால்
ஓங்கியே அசுரரை விரட்டிட லாமென
ஏங்கிய தேவரும் திருமால் தொழுதே
பாங்காய் மந்தரை மத்தாய் மாற
வாசுகிப் பாம்பை கயிறென மாற்றி
மறுபுறம் அசுரர் இப்புறம் இவராய்
குறுகுறு வென்றே கடையத் துவங்க
விரைந்தே அமுதும் விஷமும் எழவே
திணறினர் தேவர் தேவையோ அமுதம்
வினவினர் விஷத்தை என்னதான் செய்ய
வணங்கிக் கேட்க வாமனன் சொன்னான்
அனங்கனை எரித்த அரனைக் கேட்பீர்
அரனோ யாரவன் அடியவர் பணிந்தால்
பரந்த உலகினை படக்கெனக் கொடுப்பவன்
சரசர வென்றே சாரைபோல் வந்து
கரகர வென்றே கட்டியாய் விஷத்தை
கடக்கென விழுங்கக் கணவனின் கழுத்தை
படக்கெனப் பார்வதி பற்றி நிறுத்தி
சடசட வெனவிஷம் போகாமல் அங்கே
படபட வென்றே பார்வையை நிறுத்த
விஷமும் நிற்க வீரிய அமுதம்
கரங்கொளா வண்ணம் தேவரும் குடிக்க
வரமாய்க் கிடைத்த வாழ்க்கையை வாழ
அரனோ நீல கண்டனாய் ஆக
காத்தது அமுதா கரங்களை நீட்டி
பூத்த விஷத்தைக் குடித்தவன் அருளா
நீர்க்க வைத்த உமையவள் அருளா
சேர்ந்தது அரியின் அரனின் அருளே..
//அது சரி..இது ஒன்னோட சின்னவயசுல முழியும் முழியுமா லட்சணமா இருப்பான்னு அடிக்கடி சொல்வியே விமலா டீச்சர்..அவ பாட்டு தானே..
அடப்பாவி..அந்தம்மா இப்ப கொள்ளுப்பாட்டியால்ல ஆகியிருப்பாங்க..இப்ப எதுக்கு அவங்கள இழுக்கற..”
“இல்லடா செல்லம்..ஆசிரியப் பாவான்னு ஸிம்ப்பிளா கேட்டேனாக்கும்..ம் அதுவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.. சரி போ..பாட்டுக்குள்ள போகலாமா..”
“ம்:
***
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் க டலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியி ராப்பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
திரு நெடுங்களத்தில் எழுந்திருக்கும் எம்பிரானே..சொக்கா..
ஹாஹா என ஆரவாரம் புரிந்து ஆர்ப்பரித்திருந்த பாற்கடலை மந்தரை மத்தாக வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த போது, வாசுகிப் பாம்பின் மூச்சிலெழும்பிய விஷமும், பாற்கடலில் இருந்து முதலில் எழுந்த விஷமும் சேர்ந்து ஆலகால விஷமாக மாறி மிகக் கொடிய நஞ்சாகிவிட, தேவர்கள் உன்னிடம் வந்து கதறியதால் அருள் மிகக் கூர்ந்து சுந்தரரை அனுப்பி அதைக் கட்டியாக்கி தேவரைக் காப்பதற்காக விழுங்கினாய்..
ஹச்சோ..உலகிலுள்ள உயிர்களெல்லாம் மரித்து விடுமே என உமையன்னை மனதிற்குள் அல்லோலகல்லோலப் பட்டு காற்றினும் கடிதாய் எண்ணத்தினும் கடிதாய் விரைந்து வந்து உனது கழுத்தையும் பிடித்து இறுக்க, மென்மனசுக்காரன் நீ அந்தக் கொடிய விஷத்தை உன் கழுத்திலேயே இருத்திக் கொண்டாய்..
இப்படி மென்குணம் கொண்டு மற்றவரைக் காத்திடும் உன்னைப் பற்றிப் பல பேர் உருகிப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..அந்த அடியவர்களின் பாடல்களைப் பாடியும் ஆடியும் உன் பேர் சொல்லி உன் கழல் தொழுதிடும் அன்பர்களின் இடரைத் துன்பங்களை நீ களைவாயாக..”
*
-
குட்டிக் குழந்தை
சாக்லேட் பேப்பரைப் பொறுமையாய்ப்
பிரித்து
பின் எடுத்து
வாயில் இட்டுக்கொண்டு
பார்க்கும் பார்வையைப்
பார்த்தாலே பெருகும் சந்தோஷம்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
மூன்றாம் பாடல்
*
மூன்றாம் பாடல்..
“என்றும்பதினாறுவயதுபதினாறு
மனதும்பதினாறுஅருகில்வாவாவிளையாடு”
“ஆரம்பிச்சுடயாடாப்பா..”
“ நீயும் பாட்டி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டயா மன்ச்சு.. சரீஈ.. இப்ப எதுக்கு சலிச்சுக்கற.. நான் பக்திப் பாட்டு தானே பாடினேன்”
“அடப்பாவி..”
“பின்ன.. பார்.. வள்ளி முருகன் பாடறா மாதிரி தானே வருது..
உன்விழிகள்பொங்குவதெதனாலே?
இந்தவீரத்திருமகன்வேலாலே.. சரிதானே”
”உன்னைத் திருத்தவே முடியாது..சரி பாட்டு என்னாத்துக்கு.. நம்ம மார்க் பையரைப் பத்தியா..ஏதாவது பாட் எழுதப் போறியா என்ன”
“அஃதே”
****
கால தேவன்:
******
காலக் கணக்கை முடிக்கும் இந்தக்
…கடின வேலை எனக்கே உண்டு
ஞாலம் முழுக்க வாழும் மக்கள்
..நன்றாய் இறுதியில் சொர்க்கம் நரகம்
ஜாலம் செய்தும் தானாய் முடிந்தும்
…ஜகத்தில் இருந்தே விடுவ தற்காக
பாலம் போன்றே வேலை செய்வேன்
..பாவி எமனே எனவே அழைப்பர்..
இருந்தும் இருந்தும் மனத்திற் குள்ளே
..ஏதோ சலனம்; நெகிழ்ச்சி இன்று
திருத்தம் உண்டா தீர்க்கம் கொண்டே
…திரும்பித் திரும்பிப் பார்த்தேன் கணக்கை
விருப்பம் இல்லை விஷயம் உண்டு
…விடலைப் பருவம் கடந்த பிள்ளை
சிறுவன் வயதோ பதினா றென்றால்
…சீச்சீ இன்றா வாழ்வு முடியும்..
பாலன் முகத்தைப் பார்த்தால் பாவம்
.. பால்போல் வெண்மை நெற்றி முழுதும்
கோலம் போலே மின்னும் நீறு
…கொவ்வை உதட்டில் என்ன பேச்சு
ஆலம் உண்ட அரனே சிவனே
…அனைத்து உயிர்க்கும் நன்மை செய்க
பாவம் பையன் தன்னைப் பற்றி
..பற்றை விடுத்துப் பிறரைக் கேட்கிறான்..
ஆர்ப்பாட் டமிலா அழகாய் முகமே
…அணிந்த நீறில் அணியாய் நெற்றி
வார்த்தே வைத்து செதுக்கி னாற்போல்
..வயண மாகத் தீர்க்க நாசி
பார்ப்போர் ஈர்க்கும் பணிவும் அருளும்
…பற்றி யிருந்த தோற்ற எழிலும்
மார்க்கண் டேயன் என்றே பெயராம்
…மாள்வான் இன்னும் சிலநே ரத்தில்
கலக்கம் மயக்கம் கண்ணில் தயக்கம்
…காட்ட விடாமல் தடுக்க ஈசா
வழக்கம் போலே உயிரை எடுமுன்
..வணங்கித் தொழுவேன் வாழ்த்தும் நானும்
பலமாய் நெஞ்சம் இறுக்க வைத்தே
..பாழும் இரக்கம் வந்து விடாமல்
நலமாய் எடுப்பேன் நல்லோன் உயிரை
…நாட்டம் விட்டே விடுவேன் கயிற்றை..
அடடா இங்கே நடக்கும் விஷயம்
…ஆச்சர் யந்தான் ஏனோ ஏதோ
திடமாய்க் கயிற்றை விட்டேன் நானும்
…தீர்க்க மாகச் சிவனின் நாமம்
தடவிச் சொன்ன சிறுவன் தட்டென
…தாவிப் பாய்ந்தே லிங்க முகத்தில்
மடலாய்க் கைகள் அணைத்தே பற்றி
…மகாதே வென்றே சொல்லும் போதில்
பாய்ந்தது கயிறு பக்குவ மாக
…பரமனை, பையனைப் பற்றியே இறுக்க
வாய்த்தனன் எனக்கே வகைதொகை யாக
..வாலிபம் இன்னும் வளர்ந்திடா பிள்ளை
சாய்த்திட வேண்டும் இவனுயிர் இன்று
..சங்கட மில்லை இதுவிதிக் கணக்கு\
ஆய்ந்திட எனக்கோ பொழுதெதும் இல்லை
…அழுத்தியே இழுப்பேன் அவனுடன் அரனை..
**
மார்க்கண்டேயன்..
கண்களில் கண்ணீர் மல்க
…காலையில் அம்மா பேச்சு
சொன்னதைக் கேட்பாய் பையா
…சோர்வெனை வந்து சேரும்
அன்னைநான் சொல்வேன் இன்று
…அரனையே பார்க்க வேண்டா
திண்ணமாய் மறுத்தே நானும்
..தீர்க்கமாய் இங்கே வந்தேன்
ஈசனே உன்னையே இங்குநான் கண்டபின்
தேசமும் தேகமும் வேண்டாமே – பூசனை
செய்துதான் உன்னடி சேர்ந்திடுவேன் எந்தனுக்கு
நல்லவழி என்றும் நவில்..
கடகடன்றே சுழன்றடிக்கும் காற்றைப்போல் வந்தான்
…காலனவன் கருமையுடன் கண்களையே வைத்தான்
விடமாட்டேன் சிறுவாவுன் வாழ்நாளும் இன்று
…விடைபெற்றுப் போகுதடா பார்ப்பாய்நீ நன்று
தடதடக்கும் குதிரையதன் குளம்பொலிபோல் குரலே
…தயங்காத நோக்கத்தில் எழுந்ததவன் கயிறே
உடல்தானே போகட்டும் என்றெண்ணி நின்றும்
…உணர்வுகளும் உலுப்பலுற அணைத்துவிட்டேன் அரனை..
**
ஈசன்
காலந்தனை காலத்தினில் காப்பாற்றுவோன் அவனை
காலன்பெரு கயிற்றால்இழுத் திடவும்முடிந் திடுமோ
ஆலம்விஷம் அள்ளிக்குடித் திட்டேபுவி அணைத்தோன்
பாலம்விதம் பாலன் தனை அடையப்பொறுப் பானா..
சிவந்தது முகமு மங்கே
..தீர்க்கமாய்க் கண்கள் மேலும்
நயமெலாம் விலகி நெஞ்சில்
…நல்கியே எழுந்த சீற்றம்
விலகிடு எமனே என்றே
…வித்தகன் குரலெ ழுப்பி
.நலமுடன் இடது காலை
…நகர்த்தியே உதைத்து விட்டான்.
*
கால தேவன்..
தொழுதுதான் இருந்தேனே நானும் – உன்னை
பழுதுகள் கொண்டிலா பக்தியில் தானும்
விருதுகள் வேண்டவிலை ஈசா – உன்
தாழ்துகள் கண்ணொற்ற ப் போதுமே ஈசா
எண்ணத் துறைபவனே - ஈசா
…என்னுயிர் கொண்டவனே
கண்களை மூடியின்று – உந்தன்
காலடி எனக்குத் தந்தாய்…
சிந்தனை செய்துவிடில் – துயரம்
..தீர்க்கமாய் மோதுதய்யா
என்பணி செய்ய வந்தால் – இந்த
..இக்கட்டும் ஏனோ ஐயா..
ஈசன்:
எமனென்றால் அனைவரையும் கலங்கடிக்கும் ஆற்றல்
..ஏற்றமுடன் கொண்டிருக்கும் தேவனென்று சொல்வார்
நனவுதனை நிஜமென்று நம்பிநிற்கும் மாந்தர்\
…நன்றாகக் கனவென்றே உணரவைப்போன் நீயே
கனம்பொருந்தும் கடினமன வேலையினை இங்கே
…கடிதாகச் சரியாகச் செய்பவன்நீ அன்றோ
பனம்பழம்தான் வீழ்ந்ததென்றால் காகமென்ன செய்யும்
…பதறாதே எமதர்மா பதில்சொல்வேன் நானே
எக்காலம் அடியாரின் குரல்க ளெல்லாம்
…ஏதேனும் கவலையிலே அழைத்தால் அங்கே
தக்கபடித் தோன்றித்தான் உதவிசெய்வேன்
..தாளாமல் இன்றும்நான் ஓடி வந்தேன்
பக்குவமாய் யோசித்தால் புரியும் காலா
….பாங்குடனே உனையுதைத்த் செய்கை எல்லாம்
தப்பாமல் தினம்தினம்நீ வேண்டி நின்ற
…திருவடியின் அருள்கொடுத்தேன் உனக்கே தானே..
இளவயது முதுபக்தி இன்னும் என்ன
…ஈசனிவன் பார்த்திடுவான் என்றே இங்கு
இளகாத மனங்கொண்டு மார்க்கண் டேயன்
…இரந்துருக வந்தேன்நான் கொள்ளாய் கோபம்
வளமுடனும் வாகாக தைரி யத்தை
…வாழ்க்கையிலே உன் தொழிலில் கொள்வதற்கு
விலகாத உமையாளின் பாதம் கொண்டு
…விளையாட்டாய் உதைத்தேன்நான் வேறு இல்லை..
*
காலதேவன்..
பாச மிகக்கொண்டு பல்விதமாய்க் கேட்டதற்கு
ஈசா பதிலினை ஈந்திட்டாய் – வாசமிகும்
பூக்களாய் மாறிப் பொலிந்ததென் நெஞ்சமும்
வாக்கினில் என்றென்றும் வா..
*
ஹப்புறம்…..
என்ன அப்புறம்மன்ச்சு, மார்க்கண்டேயனுக்கு சாகாதவரம்..எமனுக்குச் சின்ன உதை..பட் அந்த உதைக்குள்ள ஒரு அர்த்தமும் இருக்கு தெரியுமோ
என்னவாம்
ஹச்சோ ..விருத்த்துல ட்ரை பண்ணினேனே..புரியலையா என்ன..சிவன் மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டு எமதர்மனை உதைத்ததலம் திருக்கடவூர்..பட் அவர் ஏன் இடது கால்ல உதைத்தார்..
ஊர் உலகுக்கெல்லாம் உயிரை எடுக்கற எமன் கணக்கு தப்பவே கூடாதாம்..கொஞ்சூண்டு இரக்கம் காட்டினால் அவ்வளவு தான்.. காலக்கணக்கு முடிந்தும் வாழ்ந்தே நிறையப்பேர் இருக்க பூமிமாதா தாங்கமாட்டாளாம்..இதுவே எமனோட ரகசியக் கவலையா இருந்ததாம்..ஸோ மார்க்கண்டேயருக்கு அருளறமாதிரி இடது காலால எமனை உதைச்சுட்டார்..
ஏன்..ஏன்னா இடது கால் தேவியினுடையது..சக்திஸ்வரூபம்..அம்பாளாகப் பட்டவளது பதம் பட எமனுக்கு மீண்டும் மனவுறுதி தீர்க்கமாய் எழுந்ததாம்..தெரியுதா..”
“என்னவோ நீ சொல்ற நான் கேட்டுக்கறேன்.. சரீஈ..வா.பதிகத்துக்குள்ளே செல்லலாம்”.
*
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியா னுயிரைவவ் வேலென்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
திரு நெடுங்களத்துள் அருள் புரியும் ஈசனே, மகாதேவா
மார்க்கண்டேயன் உனது திருவடிகளையே கண்ணிறுத்தி நெஞ்சிறுத்தி வழிபட்டு வந்தான்.
.அவன் உன்னைச் சரண்புக, அவனை க் கூற்றுவன் எனப்படும் காலதேவனாகிய எமனிடமிருந்து விடுவித்து எமனையும் உதைத்து விட்டாய்..மார்க்கண்டேயனைக் காத்து அவனுக்கு அருள் புரிந்தாய்..அதைப்போலவே உன் பொன்னடிகளையே எண்ணி எண்ணி உருகும் அடியவர்களின் இடர்களை களைந்திடுவாயாக..
*
-
மகிழ்ச்சி எனப்படுவது மாசிலா அன்பைப்
பகிர்வதே பாரினில் பார்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
நான்காம் பாடல்
*
*
நான்காம் பாடல்..
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்
தென்னாட்டில் எல்லாரும் கொண்டாடும் வேலையடி”
“என்னடா.. கோவாப்டெக்ஸ் எதுக்குப் போனே நீ”
“மன்ச்சு.. இந்தப்பாட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினது.. நம்ம கண்ணதாசன் என்ன சொல்றார்..
பின்னிவைத்தகூந்தலில்முல்லைபூவைசூடினால்
கன்னிநடைபின்னல்போடுமா – சிறு
மின்னலிடைபூவைதாங்குமா”
“ஆமா எனக்கும் சொல்லத் தெரியும் மருதகாசியோட பாட்டு..
. சொந்தமெனும்உறவுமுறைநூலினாலே
- அருட்ஜோதியானஇறைவன்செய்தபின்னல்வேலை
பாசவலைபாசவலை”
”உனக்கு வயசாய்டுத்து மனசாட்சி.. இந்தபார்.ஸ்ரீதேவி பாடறத..
பின்னல்விழுந்ததுபோல்எதையோபேசவும்தோணுதடி .
நல்லாத்தான் இருக்கில்லை..பட் இது எல்லாம் பின்னுவது , குழறுவது என்பது போல் இருக்குல்ல..இந்தப் பாட் பார்த்தாக்க ஒரு மணப்பெண்ணைப் பத்தி அனேகமா வாலி எழுதியிருக்கார்னு நினைக்கறேன்..
அல்லிவிழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்திவண்ணப் பின்னல்மீது தாழைமலர்சூட்டி
ஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடைவந்தாள் மின்னல் முகம்காட்டி..
இதுல பார்த்தா சோனாலிபிந்த்ரேயோட ஜடைப்பின்னல் முழுக்க மலர்மாலை சூட்டியிருக்காங்க..இதுல தான் பின்னல் நா ஜடைப் பின்னல்..ஜடையிலுள்ள முடியின் பின்னல் என வருது
மின்ன லிடையழகில் மென்மைக் குறுநகையில்
பின்ன லசைந்திடவும் பித்தானேன் – சின்னவளே
கன்னல் மொழியால் கவர்ந்திழுக்கும் கன்னிநீ
வண்ணமாய் என்னருகில் வா
அப்படில்லாம் சொல்லலாமில்லையா.
“ஜொள்ளலாமில்லையான்னு சொல்லு! அது சரீஈ ஏன் பின்னிப் பின்னிப் பேசற...ஆகக் கூடி ஜடையைப் பத்திப் பேசப் போறயா”
“பின்ன..உனக்குத் தெரியுமோ குடத்துல கங்கை அடங்கும்..”
“தெரியாம என்ன காளமேகம் பாடல் தானே..
விணணுக்கடங்காமல்வெற்புக்கடங்காமல்
மண்ணுக்கடங்காமல்வந்தாலும் –பெண்ணை
இடத்திலேவைத்தவிறைவர்சடாம-
குடத்திலேகங்கையடங்கும்
இதைப் பத்திச் சொல்லணும்னா பகீரதனைப் பத்திச் சொல்லணும்..
பகீரதன் தன் முன்னோர்கள் உய்வதற்காக ஆகாச கங்கை மண்ணில் வரவேண்டுமென கங்கையிடம் சென்று கேட்டானாம்.. கங்கை, யூஸீ பகீரதா.. ஐ கேன் ஃபுல்ஃபில் யுவர் விஷஸ்.பட் பார்த்தேன்னாக்க என்னோட வேகம் ஹைஸ்பீடுப்பா..வந்தேன்னு வச்சுக்க.. பூமி தாங்காது..ஸோ என் வேகத்தைத் தாங்கற மாதிரியார்கிட்டயாவது கேட்டுச் சொல்லு..தென் ஐ வில் கம்” என்றாளாம்..
பகீரதன் எல்லாரிடமும் கேட்டு விஷ்ணுவிடமும் கேட்க “இதப் பார் பகீரதா.. ஈசன் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணு..அவரால தான் முடியும் அந்த வேகத்தைத் தாங்கறதுக்கு” எனச் சொல்ல ஈசனிடமும் வேண்ட ஈசன் “ஓ.கே ஐவில் டூ இட் ஃபார் யூ, மை பாய்” என ச் சொல்ல கங்கையிடம் “ நீ வாம்மா மின்னல்” எனப் பகீரதன் கேட்டானாம்..
கங்கையம்மாக்குள்ள ச் சின்னதா கர்வம்..இது நல்லாருக்கே.. நான் யார்..ஆக்ரோஷ கங்கை..இந்தச் சிவன்யார் இவர் சடாமுடியைப் பிடிப்பாராம்.. நான் பாயறதை த் தடுப்பாராம்..வேலைக்காகுமா இது..
படால்னு குதிச்சா கங்கை..இறைவனோட சடாமுடிமேல..குதிச்சது அவ இல்லை..அவளோட..அகங்காரம்
பார்த்தார் லார்ட் ஷிவா..ஓ..இந்தப் பொண்ணுக்கு ஐ வில் டீச் ஹெர் எ லெஸன்னு நினச்சு கங்கை மொத்தத்தையும் தனது சடாமுடிலச் சுருட்டி அடக்கிட்டார்.
பார்த்தான் பகீரதன்..இது என்ன வினையாப் போச்சேன்னு ஃபீல் பண்ணி மறுபடி தவம்..மறுபடி ஈசன் வந்து அருள கங்கை கொஞ்சம் வேகம் குறைந்து பூமியில் பாய்ந்தாளாம்..
இதைத் தான் காளமேகம்..
விண்ணிலும் அடங்காமல், மலைகளிலும் அடங்காமல் மண்ணில் வீழ்ந்த போதும் அடங்காமல் கோபத்துடன் பாய்ந்த கங்கை என்ன ஆனாள்.. இடப்பாகத்தில் உமையவளை வைத்திருந்த ஈசனின் ஜடாமகுடத்தில் அடங்கினாளா இல்லையா…
என்கிறார்.. சரியாடா”
“ நல்லா கதை சொல்ற மனசாட்சி..
மங்கை அடக்கம் மறுதலித்தால் ஆகிவிடும்
கங்கை நதியின் கதி
ந்னு சும்மாவா சொன்னாங்க….
இதுவே திருவாசகத்தில கேள்வியும் பதிலுமா சாழல் விளையாடற இரண்டு பெண்கள் பேசிக்கறா மாதிரி வந்திருக்கு தெரியுமோ..
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடீ ?
சலமுகத்தால் அவன்சடையில் பாய்திலனேல் தரணிஎல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெரும்கேடாம் சாழலோ..
கங்கை அந்தப் பரமன் சடையிலே பாயாமல் போயிருந்தால் பூமில பிரளயம் தான் வந்திருக்கும்னு பெண் ஆன்ஸர் பண்றா..
ஆக அப்படிப் பட்ட ஜடாமகுடம் தரித்த ஈசனைப் பற்றி இந்தப் பாட்டுல என்ன சொல்லியிருக்கு தெரியுமா.. வா உள்ள போய்ப் பார்க்கலாம்”
*
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய்த லைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
திரு நெடுங்குளத்தில் உறைகின்ற எம்பிரானே, தென்னாடுடைய சிவனே,..
இமவான் மகளாகிய பார்வதி தேவிக்கு உன்னில் ஒரு பாதியைக் கொடுத்து மகிழ்ந்தாய்..ஆக்ரோஷமாக வந்தகங்கைக்கு அன்புடன் உனது ஜடாமகுடத்தில் இடம் கொடுத்தாய்..திருவையாற்றில் ஆரூரனென அருள்புரிபவனே..
தலையோட்டை விரும்பி ஏற்று அதன் பிரசாதங்களை ஏற்று மகிழ்பவனே..
உனது அடியவர்கள் எல்லாம் உனது திருவடியின் கீழ் நிற்பதையே விரும்புகின்றன.ர்..
எனில் அவர்களது இடர்களைக் களைந்து அருள்புரிவாயாக..
**
-
தண்ணீர் விட்டவுடன்
காற்றைத் துணைக்கழைத்து
தலையசைக்க வைத்து
மகிழ்ச்சியைச் சொல்கின்றன
செடிகள்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஐந்தாம் பாடல்
*
**
பாடல் ஐந்து
கைலாய மலைவாழும் ஈசன் – அங்கே
கரங்குவித்து வணங்குவரை அணைத்திடும் நேசன்
வெயிலாக மழையாக வந்தான் – பின்பு
வேகமாய் அடியாரைக் காத்தருள் செய்தான்
மயிலாடும் கந்தனின் அய்யன் – அவன்
மாறாமல் நினைப்போர்க்கு என்றுமே மெய்யன்
பயிலாத பாமரர் சிந்தை – இவன்
பக்கம் பணிந்தால் காட்டுமே விந்தை
குணங்கண்டார் குணமே கண்டார்
…குறையிலா தவத்தோற் றத்தில்
உமைக்கண்டார் உமையுங் கண்டார்
…உடனுடன் கூடும் அன்பால்
அனந்தமாய் நெஞ்சில் கண்டார்
..அன்பிலே உனது தாளை
கணமென்றும் கண்ணில் கண்டார்
…காத்திடு கயிலை நாதா..
*
“ஆமா ஏன் சிரிக்கறே மனசாட்சி”
“பின்ன நீ நாதான்னு முடிச்சுருக்க.. எனக்கு
நாதா எனச் சொல்கிற ரமாப்ரபா நினைவு தான் வருது....
..அது சரி என்னமோ எழுதிப் பார்த்திருக்க இந்தப் பாட்டையே கரெக்டா..வா உள்ள போய்ப் பார்க்கலாம்..”
*
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
திரு நெடுங்களத்தில் உறையும் இறைவனே, மீனாட்சி மணாளா..
நீ மிக அரிய விசேஷமான குணங்களைப் பெற்றவர்கள்..எப்போதும் நல்லதையே சிந்தித்து நல்லதையே செயல் படுத்தும் குணவான்கள், ,தவம் மேற்கொண்டவர்கள், பாரில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோரிடம் பலி (பிட்ஷை) வாங்குகிறாய்
உனது அடியார்கள் என்ன செய்கிறார்கள்..
உனது இந்தச் செயலில் ஒன்றி உன்னைப் புகழ்ந்து நல்லோர்கள் பாடிய பாடல்களால் தொழத்தக்க உனது திருவடிகளை வணங்கி கரைகடந்த அன்போடு உன்னைத் தொழுது அந்தத் திருவடி நிழலை விலகாதவாறு இருக்கிறார்கள்..
அப்படி உள்ள அடியார்களின் இடர்களைக் களைவாயாக....
-
ரொம்ப வியர்த்ததோ என்னவோ
தூரத்தில் தெரிந்த
மேகக் கைக்குட்டையிடம்
முகம்புதைத்துவிட்டான் சூரியன்..
அதுவும் சில நொடிதான்..
ஃப்ரஷ் ஆகி
வெளிவந்து
மறுபடி சிரிக்கிறான் மகிழ்வுடன்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஆறாம் பாடல்
*
வாகர்த்தாவிவ சம்ப்ருக்தெள
வாகர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப் பிதரெள வந்தே
பார்வதி பரமேச்வரெள”
“என்ன மனசாட்சி.திடீர்னு ஜெயப்ரதா டான்ஸ் நினைவுக்கு வந்துடுச்சாக்கும்..”
“உன்னை..உன்னை… இது ரகுவம்சத்துல வர்ற ஸ்லோகம்..சொல்லும் பொருளும் போல இணைந்திருப்பவர்களும் சொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியானவர்களும், உலகத்தைக் காத்து ரட்சிப்பவர்களுமான பார்வதி, பரமேஸ்வரரை வணங்குகிறேன்னு அர்த்தம்..இதையே சலங்கை ஒலில்ல இளையராஜா கையாண்டிருப்பார்..
சரி.. இந்தப் பாட்டுல விருத்தனாகி பாலனாகின்னு வருதே
விருத்தன் என்றால் வயதில் ஆண்டுபல சென்றவர் முதியவர்னு அர்த்தம்..ஆனால் பாலனாகின்னு பார்த்தால் இளமைத் தோற்றத்துல இருக்கற ஈசன்.. கருத்தன்..முழு முதற்கடவுள்..அதாவது சொல்லுக்கும் பொருளுக்கும் ஓனர்..அதுவே அருத்தன்ங்கறதும்.. மேட்டர் ஸிம்ப்பிள் தான்..வா உள்ளே போலாம்..
ம்ஹூம் ஒரு விருத்தம் சொல்லேன்..
எத்தரமாய் பாட்டுவரும் ஏக்கமுடன் மேல்நோக்கி
…எட்டியெட்டிக் கற்பனைநூல் தக்கபடி வண்ணமிட்டு
பத்திரமாய் நெஞ்சுள்ளே பலவாறாய் ஆறவிட்டு
…பக்குவத்தைப் பார்த்துவிட்டுப் பாங்காகத் தறிபூட்டி
உத்தேசம் இதுவென்று உணர்வினிலே வரும்விருத்தம்
…ஓங்கித்தான் தாளினிலே அழகாகத் தானெழுதி
சித்தத்தில் உள்ளவற்றை இறக்கிவிட அஜந்தாவின்
…சித்திரமாய் நின்றிடுமே சிர்மல்கும் பாட்டதுவும்..!
அது சரி மன்ச்சு என்ன ஆச்சு..சோர்வா இருக்க
இல்லைப்பா ஒரு சிந்து பாடலாம்னு நினைச்சு பல சிந்துப்பாக்கள் பார்த்தேனா எப்படி எழுதுவேன்னு ஏக்கமா வருது..
உனக்கே ஏக்கம்னா நான் என்ன செய்யறது..
என்மனதில் ஒளியேற்ற வந்தாய் – ஈசா
என்றென்றும் உந்தனையே நினைத்திருக்க வைத்தாய்
கண்களிலே பெருகுதே கண்ணீர் – உனைக்
கண்டிட்ட போதிலே வந்துவிட்ட நன்னீர்
எண்ணங்கள் ஒருங்கிணைத்து உன்னை – இன்று
ஏற்றமாய்ப் பாடவும் நானிங்கு வந்தேன்
சின்னவன் ஆழ்மனதில் புகுந்து – சிவனே
சீர்மல்கும் பாட்டுக்கள் பலவாறாய் எழுது
சரியாடா..
“பரவால்லை மன்ச்சு.. நான் எழுதறா மாதிரி இல்லை..வா.. பதிகத்துக்குள்ள போகலாம்”
*
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
*
திருநெடுங்களத்தில் வாழும் இறைவனே..மகாதேவா..
நீ எப்படி இருக்கிறாய்..
ஆண்டுகள் பல கடந்ததில் அந்தக் கணக்கிற்கேற்ப முதியவன்..ஆனால் இளமை வடிவங்கொண்டு இருக்கிறாய்..
நான்கு வேதங்களையும் நன்குணர்ந்த தலைவனாகவும்இருக்கிறாய்
முழுமுதற்கடவுளான நீ கங்கையை சடையில் வைத்துக் கொண்டாய்..
சொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியாகி இருக்கின்றாய்..
அதே சமயத்தில் உன் திருவடிகளைப் பாடியும் ஆடியும் மகிழும் அடியவர்களின் இடர்களை களைவாயாக..
*
-
இளவரசியக் காப்பாத்தினானா இல்லியா பாட்டி
நீ தூங்கு நாளைக்குச் சொல்றேன்
ம்ஹூம் சொல்லு ராட்சஸன் என்ன ஆனான்..
அதுவா ஒருவேலை எடுத்து
இளவரசன் எறிஞ்சானா
ராட்சஸன் மேலோகம்போய்ட்டான்.
இளவரிசியும் இளவரசனும்..”
வெய்ட் பாட்டி நான் சொல்றேன்
லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர் சரியா..
பாட்டீ பாட்டீஈ..
பாட்டி தூங்கியிருந்தார்..!
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஏழாம் பாடல்
*
”குட் ஈவ்னிங்க் லேடீஸ் அண்ட் ஜென் ட்டில்மென்!
உங்களை இப்போது புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன்..
அதோ அங்கே ஒற்றுமையாய் தவம் புரிந்தவண்ணம்மூன்று பேர் இருக்கிறார்களே யார் அவர்கள்.
மூவரும் சகோதரர்கள். வித்துவன்மாலி , தாரகாட்சன், கமலாட்சன்.. இவர்கள் தாருகன் என்ற அரக்கனின் பிள்ளைகள்..
எதற்காகத் தவம்.. யாரிடம் தவம்
அவர்கள் மனதில் ஒரு எண்ணம்..ஒவ்வொருவருக்கும் ஒருகோட்டை வேண்டும்.. அவை நினைத்த மாத்திரத்தில் எங்கும் பறக்கும் படி இருக்க வேண்டும்..அதே சமயத்தில்மூவரும் ஒன்றாய் இருக்கும் போது ஒரே ஒரு அம்பினால் மட்டுமே உயிர் பிரிய வேண்டும்..இதுகாரணம்
இதைக் கொடுப்பவர் பிரம்ம தேவன்.. அவரிடம் தான் தவம்..
பிரம்மனும் மகிழ்ந்து வரம் கொடுத்துவிட ஆரம்பித்தது வினை..
மூவர் மனதிலும் மூன்று அழுக்குகள் குடியேறின.. ஆணவம், மாயை, கன்மம் (கர்மம்)..எனில் அவர்களது எனிமிஸ் தேவர்கள்....எனில் தேவர்களைப் படுத்த ஆரம்பித்தார்கள்.
அசுரர்களாய் இருப்பினும் சிறந்த சிவபக்தர்களாகவும் அவர்கள் இருந்ததால் தேவர்கள் திருமாலையும் பிரம்மனையும் அழைத்து சிவனை வேண்டினர்.
அவர்களை அழிக்கவும் இயலாது.. தனது பக்தர்கள்..இப்படி தேவர்களைத்துன்புறுத்தவும் விட இயலாது..
சிந்தித்தார் சிவன்..
“விஸ்வ கர்மா”
“உள்ளேன் ஐயா”
“ நீ சென்று ஒரு வெகு அழகான ரதம் செய்”
“இதோ” தேவதச்சனான விஸ்வகர்மா சிறந்த ஒரு ரதம் தயாரித்துக் கொணர, வில்லாக மேருமலையையும் வாசுகிப்பாம்பை நாணாகவும் கொண்டு , நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி பிரம்மாவைச் சாரதியாக்கி முப்புரம் நோக்கிப் புறப்பட்டார் ஈசன்.
மூன்று கோட்டைகளும் ஒன்றாய்ப் பறந்து வந்துகொண்டிருந்தன..உள்ளே மூன்று சகோதரர்கள் சற்றே இறுமாப்புடன் பேசிக்கொண்டிருக்க பார்த்தார் சிவன்..
அம்பு எய்யவில்லை மாறாக அண்ட சராசரமும் நடுங்கும் வண்ணம் ஒரே ஒரு புன்னகை புரிந்தார்..
பொன்னகையா பூநகையா ம்ஹூம் இல்லை
..புலர்ந்தநற் காலைவண்ணம் பூண்ட நகைதான்
விண்ணகையா பூமிதன்னில் உள்ள மாக்கள்
..வெற்றியென நகைப்பதுவா என்ற வண்ணம்
எண்ணத்தில் சினமும்தான் ஏற ஏற
..எரிதழலாய் மாறியதே நகையும் அங்கே
திண்ணமென புறப்பட்ட தணலும் சென்றே
…தீர்க்கமாய் எரித்ததுவே முப்பு ரத்தை..
அவரது புன்னகையிலிருந்து புறப்பட்ட தழலானது அந்த அசுரர்களின் கோட்டைகளான முப்புரத்தை – ஆணவம் மாயை கர்மம் என்ற மூவகை அழுக்குகளைத் தகர்த்தெரிந்து எரித்து விட அசுர ப்ரதர்ஸ் தனி ஆட்களாய் வெலவெலத்து நிற்க சிவனார் அவர்களில் இருவரை வாயில் காப்போர்களாகவும் ஒருவரை தனக்கு இசைக்கருவி இசைக்கும் வண்ணமும் மாற்றிவிட்டார்..
இது முப்புரம் எரித்த வரலாறு எனலாம்
( என்னடா பெரிஸ்ஸா லேடீஸ் அண்ட் ஜெ.மேன்லாம் ஆரம்பிச்ச..முழுக்க த் தமிழ்ல சீரியஸா வேற சொல்லிட்ட..
என்னபண்றது மன்ச்சு..திடீர்னு டோஸ்ட் மாஸ்டர்ஸ்ல பேசற மாதிரி பேச ஆசை வந்துச்சு!
அதுசரி.. உனக்குத் தெரிஞ்சதெல்லாம் ப்ரெட் டோஸ்ட் தானே..
ம் .. இதுல முப்புரம் எரித்த விஷயம் வருது..தேடினா இந்தக் கதை கிடைச்சது..வா.. போய்ப் பாட்டைப் பார்க்கலாம்..
*
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
*
திரு நெடுங்களம் மேவிய இறைவனே.. தென்னாடுடைய சிவனே..
உனது உடலின் ஒரு கூற்றினை அதாவது ஒரு பாதியை உமையம்மைக்கு ஈந்து உடலின் ஒரு கூறாக அவரை ஆக்கிக் கொண்டாய்..
முப்புரத்தை எரிப்பதற்காக விஷ்ணு, அக்னி, வாயு ஆகிய மூவரின் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு வலிமைமிக்க கணையாக – அம்பாக மாற்றி அதன் மூலம் பல்கிப் பெருகிய நெருப்பினால் தேவர்களிடமிருந்து மாறுபட்ட கொள்கையுடைய அசுரர்களின் ஊரான திரிபுரத்தை எரித்தாய், மன்னவனே.
ரிஷபத்தைக் கொடியாகக் கொண்டவன் நீ..
நீ அணிந்த திரு நீற்றை மணம்மிகுந்த சந்தனமாய் எண்ணி தங்களது நெற்றியில் அணியும் பக்தர்களின் இடர்களை களைவாயாக..”
*
குட்டி விளக்கம் :
** ஆணவம் – இறைவனைச் சிந்தனையுள் வைக்காமல் இருப்பது.. தன்னை ஆள்பவன் ஒருவன் என்பதை மறந்து தான் என்பது தலைக்குள் ஏறும்போது வருவது..
கன்மம் : ஆன்மாக்கள் மனம் வாக்கு காயம் போன்றவற்றால் செய்த செய்கின்ற புண்ணிய பாவங்கள்
இக லோகத்தில் இப்படி ஆன்மாக்கள் ஆணவம் கன்மங்களைச் செய்து வருவதே மாயை எனலாம்.. அப்படி மாயையால் உழலவைத்து பின்பு தான் ஈசன் சிவானந்தப் பெரும்பேற்றை ஆன்மாக்களுக்குத் தருகிறான்..
(கரெக்டா மனசாட்சி..
தெரியலை.. ஆனா கொஞ்சூண்டு புரியறாமாதிரி இருக்கு..வா..அடுத்த பாட்டுக்குப் போலாம்..)
-
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
எட்டாம் பாடல்
*
பாடல் எட்டு..
ஹாய் ட்யூட்ஸ்..
(உனக்குத் தான் வரலைல்ல..
ச்.. வரலைங்கறதுக்காக முயலாம இருக்கலாகுமா மன்ச்சு
சரி சரி எவ்வாழ்வும் வாழ்ந்து போ!
ஹை..இது நல்லா இருக்கே)
உங்களுக்கு ஒரு கேள்வி.. இறை உணர்வு என்பது என்ன.. அது எப்படிக் கிடைக்கும்..
சரி சரி முழிக்காதீர்கள் நண்பர்களே.. இறையுணர்வு என்பதைச் சொல்லில் வடிக்க இயலுமா..
காதலாகிக்கசிந்துகண்ணீர்மல்கி
ஓதுவார்தமைநன்னெறிக்குஉய்ப்பது
வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதன்நாமம்நமச்சிவாயவே.
என்கிறார் ஞானம்.. அப்படிக் காதலாகிக் கசிந்து உருகறதைலாம் படிச்சா உணர முடியுமா..
முடியாதே..
பின்ன..
எப்படின்னு சொல்றதுக்கு முன்ன கண்ண தாசனைக் கூப்பிடலாமா..
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான் என்கிற ஃபேமஸ் கவிதை எழுதி கடோசில இரண்டு வரிகள்..
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனின்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
அனுபவமே தான் நானெனச் சொன்னான்னு முடிச்சுருப்பார்..
ஸோ அனுபவம்.. இதையே திருமூலர் திருமந்திரத்துல என்ன சொல்றார்..
( விடமாட்டே போல இருக்கு..
ஷ்ஷ் மனசாட்சி)
கண்ணில் கனவு கண்டமகள்
..கவலை மறந்த அன்புமகள்
எண்ணம் போலே வளர்ந்துவிட்டாள்
…ஏதோ சேதியும் கேட்டுவிட்டாள்
வண்ண மாக அம்மா நீ
…வாழ்ந்த வாழ்க்கை சொல்லம்மா\
என்ன சொல்ல இயலுமடி
..ஏட்டில் எழுத்தில் வராதடியே..
அழகாய் வளர்த்த அன்புமகள் ஒரு நாள் தாயிடம் கேட்கிறாளாம்..அம்மா இந்தக் கல்யாண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைலாம் நனனா இருக்குமா..
இந்தக்கால அம்மாவா இருந்தா ம்ம் உங்கப்பனுக்கு வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன் ஒரு மலபார் கோல்ட் உண்டா ஒரு மல்டிப்ளக்ஸ்ல ஃப்ளாட் உண்டான்னு புலம்பியிருப்பா..
கேட்டது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால இருந்த மகள்.. அம்மாக்குள்ள் வெட்கப் பூ பூக்குது
அடிபோடி இவளேநீ என்ன கேட்டாய்
…அவருடனே நான்வாழ்ந்த வாழ்க்கை தானா
அடிஅடியாய் விருத்தத்தில் சொல்ல லாகா
..அழகான வாழ்க்கையது என்ன சொல்வேன்
கடிதெனவே பறந்ததுவே காலம் எல்லாம்
…கடிமணத்தால் அவரென்னை கட்ட பின்னே
வடிவமான வாழ்க்கைதான் வாழ்ந்தேன் பெண்ணே
.வார்த்தையினால் சொல்லமாட்டேன் போபோ கண்ணே
பின்ன.. பொண்ணுக்கிட்ட அம்மாவால பேசமுடியுமா..அதுவும் பெர்ஸனல் சீக்ரட் ஆச்சே..
(இன்னும் நீ திருமந்திரப் பாட்டுக்கே வரலை..இன்னும் ஸ்ரீலங்கா விசிட் இருக்கு திருநெடுங்களப் பாட்டு இருக்கு. ஐ ஜஸ்ட் ரிமைண்ட் யூ
ஷ்ஷ் மனசாட்சி..இதோ வந்துட்டேன்)
திரு மூலர் என்ன சொல்றார்..
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதேஆனந்தம்
மகட்குத் தாய்தன்ம ணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே
எலேய்..சும்மா முகத்தில இருக்கற கண்ண வச்சு பார்த்துட்டு இறைவுணர்வு ந்னா என்ன..எப்படி இருக்கும்னுலாம் கேட்காதயேள்.. அகத்தில் இறையிருத்தி அந்தக் கண்ணால் பார்த்தாத் தான் இறைபற்றித் தெரியும்.. நீங்க இப்படிக் கேட்கறது எப்படித்தெரியுமா இருக்கு..பொண்ணுகிட்ட அம்மாவானவள் எப்படி த் தன் கணவனோடு இருந்த இல்லறத்தை மகள் கேட்டா சொல்ல முடியாதோ அதே போலத் தான்.. அகக்கண் திறந்தால் தான் அந்த ஆனந்த இறையுணர்வு அகப்படுமாக்கும்.. புரிஞ்சுதோ..
*
இப்போ வீ ஆர் கோயிங்க் டு விஸிட் ஸ்ரீலங்கா..
அனுமன் முதல் முதலாய் இலங்கைக்கு நுழைகிறான்.. இலங்கை எப்படி இருக்கிறதாம்..
அங்குஉள்ளமாளிகைகள்எல்லாம்மிகஉயரமாகஇருக்கின்றன .சரி எவ்வளோ ஹைட் இருக்கும் ஒரு நூறு அடி இருக்குமா..ம்ஹூம்.. இல்லை.. வானில் மேய்கின்ற நிலவு முட்டும் வண்ணம் உயரம் கொண்டவையாம்
அந்த மாளிகையின் மேன்மாடச் சாளரங்களில் மேகங்கள் ஹாய் சொல்லிப் போய்க்கொண்டிருக்குமாம்..
அந்த மாளிகைகள் பளபளவென மின்னுகின்றனவாம்..
தங்கத்தால் செய்தவையா இருக்காது..தங்கம் இவ்வளவு பளபளப்பா இருக்காது..வைரம் வைடூர்யம் போன்ற பிரகாசமான கற்களால பண்ணியிருப்பாங்களோ..ம்ஹூம் தெரியலை
ஒரு வேளை இப்படி கதிரவன்கிட்ட கொஞ்சம் கேட்டு சூரியனோட ஒளியை வாங்கி அதனால செய்ததா இருக்குமா
அல்லது மின்னலைப் பிடித்து செய்தனரா அந்த மாளிகைகளை.. ஒண்ணுமே புரியலையே..”
*
நிற்க..இவ்வாறு தவிப்பது நானில்லை.. கவிச்சக்கரவர்த்தி கம்பன்..
பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடுபொதிந்த?
மின்கொண்டு அமைத்த ? வெயிலைக் கொடுசமைத்த?
என்கொண்டு இயற்றிய எனத்தெரிவு இலாத-
வன்கொண்டல் விட்டுமதி முட்டுவன மாடம்
இப்படி மாட மாளிகைகள் இலங்கையில் மின்னின என்கிறார்..
*
:அந்த நகரம் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நகரத்தின் வெளிக் கதவுகள் தங்கம் போன்ற ஒரு உலோகத்தால் செய்யப் பட்டிருந்தன. படிகள் வைடூரியக் கற்கள் பதிக்கப் பட்ட வெள்ளியால் அமைக்கப் பட்டிருந்தன.
நகரின் நடுவில் படிகம் போல் வெண் மணல் நிரப்ப்ப் பட்ட முற்றங்கள் அமைக்கப் பட்டிருந்தன” என சுந்தர காண்டத்தில் வர்ணிக்கப் படும் இலங்கையில் வாழ்ந்தவன் இராவணன்..
(ஹப்பாடி ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்ட..வா பாட்டுக்குள்ள போலாம்.. ரொம்ப நீளமாய்டுச்சு
ம்ம் சரி
பாடல் எட்டு..
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ்இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களமேயவனே
திரு நெடுங்களம் உறையும் இறைவனே..திரு நீல கண்டனே..
இலங்கை நகரம் எப்படிப் பட்டது…
மேருமலையின் சிகரங்கள் மூன்றை வாயுபகவான் பெயர்த்தெடுக்க அவை மூன்றையும் ஒன்றாக்கி அதன் உச்சியில் கட்டப் பட்டது இலங்கை நகரம்
அதன் சுற்றிலும் இருக்கும் மதில்கள் முழுவதும் பலவித கொடிகள் பறந்து கொண்டிருக்கும்
அப்பேர்ப்பட்ட இலங்கையின் மன்னன் ராவணன்..
அவன் உன் பக்தன் தான்..இருந்தாலும் என்ன செய்தான்..
உனக்காக சாமகானம் இசைத்தவண்ணம் உன்னை மயக்கி கைலாயத்தையே கீழே பூவுலகுக்குக் கொண்டு செல்ல ஆசைப்பட்டான்
அதையறிந்த நீ கால்கட்டைவிரலால் அவனை அழுத்தி பூவுலகில் தள்ளிவிட்டாய்..
இப்படி உனது பெருமைகளைப் பற்றி இரவும் பகலும் பாடி மனம்கனியும் அடியவர்களின் இடர் களைவாயாக..
**
-
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஒன்பதாம் பாடல்
*
ஆல கால கண்டனாகி ஆடு கின்ற முர்த்தியே
ஞால முற்றும் நன்மை செய்து நல்வழிப் படுத்துவாய்
பால பாடம் கற்றல் போல பாவி நானும் இங்குதான்
வாழும் போது உன்னை நெஞ்சில் பற்றி நின்று வணங்கினேன்
*
மகாபலிபுரம் போயிருக்கியோ”
போயிருக்கேனே மன்ச்சு… ஒரு நல்ல பாட் கூட எடுத்திருப்பாங்கள்ள..என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..ஆமா ஹீரோ பேரும் ஹீரோயின் பேருமே மறந்து போச்சு.வயசாகுது மனசாட்சி..
|ம்ஹூம் எனக்கு ஆகலை.. பட் அங்க நிறைய பாட் எடுத்துருக்காங்க.. சிலையெடுத்தான் ஒருசின்னப் பெண்ணுக்கு, கல்லிலே கலைவண்ணம்கண்டான், கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
..ச் உன்னப் பார்த்து நானும் கெட்டுப் போயிட்டேன்..
சொல்ல வந்தது என்னன்னாக்க அங்க உள்ள கோவில்..ஜலசயனப் பெருமாள் கோவில் மாமல்ல புரத்தில இருக்கு..வெகு அழகான கோவில்..அதைப்பத்தி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ன எழுதியிருக்கார்னாக்க
செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
முறிந்து விழப் பாகனையு மோதி - யெறிந்து
தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
திருக்கடன் மல்லைக்குள் திரி.”
“சரி..திருக்கடன் மல்லை அதாவது திருக் கடல் மல்லை மாமல்ல புரம்..திடீர்னு எதுக்கு இந்த நூத்தியெட்டுத் திருப்பதி அந்தாதிலருந்து கோட் பண்றே
விஷயமில்லாம சொல்வேனா இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு பார்த்தேன்னா..
கம்சனோட குவாலய பீடம் நு ஒரு யானை அதை ஏவினான் கண்ணன் மேல.. கண்ணன் ஒரு பனைமரத்தைப் பிடுங்கி அதை வீழ்த்தினான்..
அது யானையின் மீதும் அதன் பாகன் மீதும் விழுந்து இருவரையும் அழித்தது.. அப்பேற்பட்ட தோள்வலிமை கொண்ட கண்ணபிரான் தான் திருக்கடல் மல்லையில் ஸ்தல் சயனப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறாராம்..அவனையே தஞ்சமென்று திரிங்கறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..
அதாவது அந்தப் போராட்டத்தில் கண்ணன் அந்தக் குவாலய பீடங்கற யானையின் தந்தத்தை ஒடித்துக்கொன்றாராம்.. அப்புறம் பிரம்மன்.அவருக்கு பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் உண்டு..
அவர்கள் இருவரையும் பற்றி இந்தப் பாட்டுல வருது..ஸிம்ப்பிள் தான் உள்ளேயே போய்ப்பார்ப்போம்
*
வேழவெண்கொம்பு ஒசித்தமாலும், விளங்கியநான் முகனும்
சூழஎங்கும் நேடஆங்கோர் சோதிஉள்ளாகி நின்றாய்
கேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களமே யவனே
திரு நெடுங்களத்தில் உறைகின்ற ஈசனே.. பார்வதி மணாளா
கிருஷ்ணாவதாரத்தில் குவாலய பீடம் என்ற யானையின் வெண் தந்தத்தை உடைத்து அழித்த திருமாலும், பெருமை மிக்க நான்முகங்கள் கொண்ட பிரம்ம தேவனும் உனது ஆதியும் அந்தத்தையும் காண எல்லாவிடத்திலும் தேடினார்கள். நீயோ ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி ஆயிற்றே..
மஹாவிஷ்ணு கேழல் எனப்படும் பன்றியின் அவதாரமெடுத்து உன் அடிகாணப் புறப்பட்டார்..அவரால் முடியவில்லை..வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அந்த வராஹத்தின் கொம்பொன்றை ஒடித்து அணிகலனாக ஆக்கிக் கொண்டாய் நீ
அப்படிப்பட்ட நீ உன்னுடைய திருவடி நிழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைவாயாக..
*
-
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
பத்தாம் பாடல்
*
*
பத்தாம் பாடல்
“தேவதையைக்கண்டேன்காதலில்விழுந்தேன்
என்உயிருடன்கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள்நுழைந்தாள்மூச்சினில்நிறைந்தாள்
என்முகவரிமாற்றிவைத்தாள்.”
“என்ன ஆச்சு திடீர்னு..”
“ச்சும்மா பாடக்கூடாதா மன்ச்சு”
“பாடு..அதுக்குன்னு இடம்லாம் இருக்கோன்னோ..இங்க என்ன ஈசனைப் பத்திப் பேசறச்சே..யாராக்கும் அந்த ஏஞ்சல்..பக்கத்து ஃப்ளாட் தமன்னா மாமியா..உன் வீட்டுக்காரிக்குத் தெரியுமா”
“ச் நீயே மாமின்னு சொல்லிட்டு இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்..இருந்தாலும் தாங்க்யூ”
“எதுக்கு”
“ஸீ ஆங்கிலத்தில ஏஞ்சல் நா தேவதை.. இல்லியோ.. தமிழ்லயும் ஒரு வார்த்தை இருக்கு துஞ்சல் உனக்குத் தெரியுமோ..ஹா ஆஆவ்..
”துஞ்சல்னு சொல்றச்சயே கொட்டாவி விடற.. சரி.. துஞ்சல் நா தூக்கம்..ஓ..இந்தப் பாட்டில வந்துருக்கா”
“எஸ்.. இதுல மட்டுமில்லை இன்னொரு பதிகத்துலயும் வருது..
துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்ச வுதைத்தன அஞ்செழுத்துமே.
நமசிவாயன்னு என்ற ஐந்தெழுத்துக்களை தூக்கம் வரும் போதும் தூக்கமில்லாத பொழுதிலும் மனம் கசிந்துருகி போற்றவேண்டும். பல வழிகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படித்தி இறைவனையே நினைத்து அவனது திருத்தாள்களை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை இறுதியில் கவரவந்த காலதேவனிடமிருந்து மீட்டுத் தந்தது அந்த ஐந்தெழுத்தே ஆகும்
சரி.. இப்ப என்ன செய்யலாம்..பாட்டுக்குள்ள போகலாமா..
ஓ.கே..
*
வெஞ்சொற்றஞ் சொல்லாக்கி நின்றவேட மிலாச்சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நெஞ்சில்வைப் பாரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
*
திரு நெடுங்களமேவிய இறைவனே.. எனை ஆட்கொண்ட ஈசனே
மனதிற்கும் உடலுக்கும் காயம் விளைக்கக் கூடிய தீய கொடுமையான சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தாங்கள் கொண்ட வேடத்திற்குப் பொருந்தாமல் இருக்கும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் வேதம் சொல்லும் உண்மைப்பொருளை ஒருபொழுதும் உணராதவர்கள்..அவர்களை விடுத்து அழியாத புகழைக் கொண்ட வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை நெஞ்சிலெண்ணி வாழும் அடியவர்களின் துயரங்களைப் போக்குவாயாக
*
-
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
பதினொன்றாம் பாடல்
*
நானாக நானிருக்க முயன்றி ருந்தேன்
…நலமுடனே அகந்தையினைக் கொண்டி ருந்தேன்
தேனாகத் தந்தாரே எனது நண்பர்
…திவ்வியமாய் ஈசனவன் பாடல் பற்றி
மானாகத் துள்ளிநீயும் படித்துப் பார்த்து
…மனதுக்குள் புகுத்தியிங்கு எழுதிப் பார்ப்பாய்
வீணாகக் கலங்காதே கண்ணா உன்னால்
…விளங்கவைக்க முடியுமடா என்றே சொன்னார்
ஏகமாய் நீருண்டு கடலுக் குள்ளே
… எறும்பினால் அதைக்குடிக்க இயலா தன்றோ
தாகமாய் இருந்ததாலே சற்றே இந்த
தாழ்சடையான் நீ\ள்முடியோன் பாடல் கொஞ்சம்
தேகத்தில் நெஞ்சத்தில் உட்செ லுத்தி
…தெள்ளியதாய் எழுதுதற்கு முயற்சி செய்தேன்
ஈசனுக்கும் நண்பருக்கும் நன்றி மீண்டும்
..எழுத்தினிலே பிழையிருந்தால் பொறுப்பீர் நீரே..
*
இப்படி இந்த இடர்களையும் பாடல்களைப் பாடுவதால் என்ன ஆகும் தெரியுமா மன்ச்சு
தெரியுமே உன்னோட பாவம்லாம் போய்டும்.. முடிச்சுட்டு நீ ஃப்ரெஷ்ஷா பாவம் பண்ணலாம்..
யோவ்.. ரொம்ப வாருகிறாய்..
ச்சும்மாடா செல்லம்.. உன்னைப் பத்திஎனக்குத் தெரியாதா..வா..உள்ளே போகலாம்..
*
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் ந லத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே
**:
நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கக் கூடிய முடிதரித்த சிவபெருமான் இருக்கும் நெடுங்களத்தைப் பற்றி சீர்காழியில் இருக்கும் பாட்டுடைத்தலைவன் ஞானசம்பந்தன் பாடிய நன்மை தரவல்ல இந்தப் பத்துப் பாடல்களைப் பாடல் வல்லோர்க்கு பாவங்கள் எல்லாம் தொலைந்து போவது உறுதி.
*
ஓம் நமசிவாய..
*
முற்றும்..:)