ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு



தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88.
வயோதிகத்தால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.

முதன்முதலில், ஃபிலிம் நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார்.
தென் இந்திய திரை வர்த்தக கூட்டமைப்பின் பத்திரிகையில் பணியாற்ற ஆனந்தனுக்கு கிடைத்த வாய்ப்பு அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது.

திரைப்பட ஸ்டூடியோக்களை வலம்வந்த ஆனந்தன் குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை திரட்டினார். தனது கடின முயற்சியால் 6000 படங்கள் பற்றிய அரிய தகவல்களை அவர் திரட்டினார்.
சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் இருந்தும் புகைப்படங்களை திரட்டி ஒரு பிரம்மாண்ட கண்காட்சி நடத்தினார். அந்த கண்காட்சி திரையுலகில் ஆனந்தனுக்கு நல்லதொரு பெயரும், பெருமையும் பெற்றுத் தந்தது.
கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் நிதியுதவியுடன் 1930-ம் ஆண்டு முதலான தமிழ் சினிமாக்கள் குறித்த ஒரு தொகுப்பினை ஆனந்தன் புத்தகமாக வெளியிட்டார்.

தமிழ் திரைப்படங்கள் குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களின் களஞ்சியமாக இருந்த அன்னாரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.