புதிய பொலிவுடன் `அசத்தப்போவது யாரு?'
கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக சன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `அசத்தப்போவது யாரு.' வெளிநாடு உள்நாடு என பட்டி தொட்டியெல்லாம் தமிழ் ரசிகர்களை சென்றடைந்த நிகழ்ச்சி இது. கடந்த சில வாரங்களாக மறு ஒளிபரப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. இப்போது மேலும் புதிய பொலிவுடன் பிரமாண்ட செட்டில் படமாகி வருகிறது. மறுபடியும் மதன்பாப், சிட்டிபாபு இணைந்து வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பற்றி அதன் இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது, "இரண்டரை வருடமாக சக்சஸ் புல்லாக சென்ற இந்த நிகழ்ச்சி ஒரு அசத்தல் மன்னர் (ரமேஷ்) விபத்தில் இறந்ததால் கொஞ்சம் பிரேக் ஆனது. இப்போது மறுபடியும் பிரமாண்ட செட் அமைத்து உருவாக்கி வருகிறோம்.
இதில் ரசிகர்களும் கலந்து கொள்ளலாம். திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சிறந்த கருத்துக்களை எழுதி அனுப்பும் ரசிகர்களுக்கும் பரிசு வழங்க இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் ஒருபோதும் அரைத்த மாவையே திரும்ப அரைக்கவிட மாட்டோம்.
இந்த நிகழ்ச்சியில் இப்போது பெண்களும் கலந்து கொள்ள வருகிறார்கள். அவர்களையும் தேர்வு செய்து மேடை ஏற்றுவோம். யார் கலந்து கொண்டாலும் அவர்கள் திறமைக்குத்தான் வாய்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான் தீர்ப்பு'' என்கிறார்.
இந்த நிகழ்ச்சியை கிரியேட்டிவ் கேம்ப் தயாரித்து வழங்குகிறது. இதன் 150-வது எபிசோடு விழாவை 15 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பெரிய அரங்கில் நடத்த உள்ளனர். அதில் இதுவரை பங்கேற்ற அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவழைத்து கவுரவிக்க உள்ளனர்.

|